சீனாவிடமிருந்து நாட்டை பாதுகாக்க மகா சங்கத்தினர் மற்றும் படையினருக்கு அழைப்பு
இலங்கையில் அதிகரித்துள்ள சீனர்களின் செயற்பாட்டிலிருந்து நாட்டைப்பாதுகாக்க மகா சங்கத்தினருக்கும் படை வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அழைப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் அணிந்திருந்தது இராணுவ சீருடை அல்ல என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகின்றார். நாட்டு மக்கள் பார்வையற்றவர்கள் என்ற எண்ணத்திலா அவர் இவ்வாறு கூறுகின்றார்? வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களிலும், சில காவல் பணிபுரியும் தொழிலாளர்களும் இவ்வாறான ஆடைகளை அணிவதாகவும் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த பகுதிகளில் அவர் இதனை அவதானித்துள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு பொய் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம்.
திஸ்ஸமகாராம வாவியில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகள் முற்றிலும் தொல்பொருளியல் கட்டளை சட்டத்திற்கு முரணானவையாகும். தொல்பொருள் முக்கியத்துவம் உடைய இடங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை யாரிடம் சென்று முறையிடுவது?
காரணம் அரசாங்கம் சீனர்களின் நடவடிக்கைகளை பாதுகாப்பதிலேயே முன்னின்று செயற்படுகிறது.
எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முன்வருமாறு மகா சங்கத்தினருக்கும் , பாதுகாப்புபடையினருக்கும் அழைப்பு விடுகின்றோம். இந்த விடயத்தில் தலையிட்டு எமது உரிமைகளை பாதுகாப்போம் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.