கார்ல்ட்டன் இல்லத்துக்கு அனுப்பப்பட்டும் முற்றுப்பெறாத ராஜபக்சர்களின் கதைகள்
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் நாட்டில் இன்று தலைப்புச் செய்தியாக மாறியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதிலும் ஆளும், எதிர்க்கட்சிகள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி நடத்தி வரும் ஊடக சந்திப்புகளும் வேடிக்கையை ஏற்படுத்துகின்றன.
ராஜபக்ச குடும்ப அரசியல் தொடர்பில் அன்று தொடக்கம் பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வந்த போதிலும் தற்போது அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் இவ்விடயம் அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்பிப்பது என்பது இன்று நேற்று அல்ல, கடந்த கால அரசியல் வரலாற்றில் நடைமுறையில் இருந்த ஒரு விடயம் என்பதை அறிவோம்.
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி
எனினும், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள், அதிலும் விசேடமாக ராஜபக்ச குடும்பத்தின் சொத்து சேகரிப்புகள் அதிகளவில் தற்போது விமர்சிக்கப்படுவதற்கு, முன்னதாக ராஜபக்சர்களின் குடும்ப அரசியலை ஒழிப்போம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் மேடைகளில் எழுப்பிய கோஷங்களும், பின்னர் ஆட்சி பீடத்தை கைப்பற்றியவுடன் வெளிப்படுத்தப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகளின் பல ஊழல் மோசடிகளுமே காரணமாகும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி தீர்மானமிக்க ஒரு தேர்தலை இலங்கை முகங்கொடுத்ததுடன் புதிய மாற்றமொன்றை மக்கள் தெரிவு செய்தனர்.
அந்த மாற்றத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையை வழங்கினர்.
அநுரவுக்கு சவால்
ஆட்சிபீடமேறிய நாள் தொடக்கம் தொடர் சவால்களுக்கும், அனுபவமற்றவர்கள் என்ற அடைமொழிக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அநுர அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
எனினும், நாடு கடந்து அனைத்து திசைகளிலும் ஒலித்த தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றும் உத்வேகம், இந்த ஒரு வருட காலத்திற்குள் இன்னும் அதிகரித்துள்ளதை அண்மையில் இடம்பெற்ற ரணிலின் கைதின் மூலம் நாம் காணலாம்.
குறி வைக்கப்படும் ராஜபக்சர்கள்
இந்த தொடர்ச்சியில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கம் மீளப் பெற்றதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொந்த ஊரான தங்காலையில் உள்ள வீட்டிற்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இவ்வாறு அடுத்தடுத்து ராஜபக்சர் தரப்பு மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்து, நாமல் ராஜபக்சவும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக அரசியல் ஆர்வலர்களிடமிருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
எனினும், ராஜபக்ச தரப்பினர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சட்ட ரீதியிலான நிரூபனங்கள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தரப்புக்கள் தெரிவித்து வந்தாலும் கூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கு முன்வருவாரா என்பதும் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் ஆர்வலர்களின் கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளன.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபயும் மற்றும் மக்களால் பெரும்பான்மை வழங்கப்பட்ட ஒரு அரசாங்கமும் முந்தைய அரசியலில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதில் தாமதம் கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ரணில் விக்ரமசிங்கவின் கைது
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசாங்கத்தின் பதிலாக இருந்தாலும், மக்கள் மத்தியில் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை என ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
இந்த பின்னணியில் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களில் சில தினங்களுக்கு முன்னர் நாமலில் பெயர் அதிகமாக பேசுபொருளாகியிருந்தது.
எனினும், தனது சொத்துக்களுக்கு காரணம் மனைவி எனக் கூறிய நாமல் பதில் ஒன்றை வழங்கி அரசாங்கத்திற்கு சவாலையும் விடுத்திருந்தார்.
இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு தீர்க்கமான விசாரணைகளை முன்னெடுக்குமாக இருந்தால், அது அவர்களுக்கு சவால்கள ஏற்படுத்துமா? அல்லது மக்களின் ஆதரவுக்கு மேலும் வலு சேர்க்குமா என்பது இதன் மூலம் தெளிவாகும் என ஆர்வலர்கள் மேலும் விமர்சித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
