மற்றுமொரு அரசாங்க அமைச்சருக்கு சிக்கல்: நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் தொடர்புடைய வழக்கை முழுமையாக்காமல் சட்டமா அதிபரிடம் அனுப்பிய கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு (CFB) அதிகாரிகளை கல்கிசை நீதிவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கடுமையாக கண்டித்துள்ளார்.
இவ்வழக்கு, “தேசிய தொழிலாளர் நிறுவனம்” என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை, தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் அதிகாரிகளாக போலியாக நடித்து, 36 லட்சம் ரூபாய்க்கு மோசடியாக வாடகைக்கு விடப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்புடையதாகும்.
இந்த நிலையில், ஏன் அவசரமாக கோப்பு சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதவான், முழுமையற்ற கோப்பை அனுப்புவது வழக்கை தாமதப்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்குமூல பதிவு
இதன்படி, விசாரணை முடிந்த பின் மட்டுமே சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஓகஸ்ட் 21ஆம் திகதி மோசடி விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன், ஓகஸ்ட் 14ஆம் திகதி பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மேயர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
பின்னர் நீதவான் குறித்த கட்டிடம் வசந்த சமரசிங்கவின் சொத்தா என விசாரிக்க, அது அவருக்குச் சொந்தமல்ல என்று காவல்துறையினர் பதிலளித்துள்ளனர்.
காவல்துறையின் நோக்கம்
அத்தோடு, 2020ஆம் ஆண்டு தொழிற்சங்க பொது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான் கட்டிடத்தை வாடகைக்கு விடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பெற்ற பணத்தை தொழிற்சங்க தேவைகளுக்கே பயன்படுத்தியதாகவும் சமரசிங்க தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அதனைதொடர்ந்து, சட்டப்பூர்வ நிர்வாகிகளும் அறக்கட்டளையும் சார்பில் முன்னிலையாகி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, கோப்பை சட்டமா அதிபரிடம் அனுப்பியது விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்பட்ட செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறையினர் ஏற்கனவே குற்றம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தகவல் அளித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தபோதிலும், இப்போது வேறு நிலைப்பாடு எடுக்க முயற்சி செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
அதோடு, சட்டப்பூர்வ நிர்வாகிகள் இருந்தபோதும், வசந்த சமரசிங்க தொழிற்சங்க அதிகாரியாக போலியாக நடித்து கட்டிடத்தை வாடகைக்கு விடுவது குற்றம் எனவும் அவர் வாதிட்டுள்ளார்.
வாதங்களை கேட்டறிந்து கொண்ட நீதாவன் சதுரிகா டி சில்வா, வசந்த சமரசிங்க மற்றும் பிறரை சந்தேக நபர்களாக பெயரிட வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கைக்கு தீர்ப்பளிப்பதை செப்டம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும், தாம் விரைவில் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளதால், அந்த நீதிமன்ற நீதாவன் தீர்ப்பளிப்பார் என்றும், இந்த முறைப்பாட்டுக்கு எந்த வித அழுத்தமும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 4 மணி நேரம் முன்
