பனியால் சூழ்ந்த டெல்லி : கடும் குளிர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நாளை (19) காலை கடும் பனி மூட்டம் ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பனியுடன் கூடிய குளிர் அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறாக கடும் பனி மூட்டம் நிலவுவதால், விமானம் மற்றும் தொடருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் குளிர்
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதன்படி, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனி மூட்டமான நிலை நீடித்துள்ளது.
ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.
வடமேற்கு காற்று
இந்த நிலையில், வடமேற்கு இந்தியாவில் இமய மலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் பனி
தொடர் பனி மூட்டம் காரணமாக தொடருந்து மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 120 விமானங்கள் மிகவும் தாமதாக இயக்கப்பட்டதுடன், 53 விமானங்கள் முழுவதுமாக தடை செய்யப்பட்டன.
மேலும், டெல்லியை தவிர கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் பனி மூட்டம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |