சமூக வலைத்தளங்களில் அதிபராகியுள்ள அநுரகுமார திஸாநாயக்க : விமர்சித்துள்ள ஐ.ம.ச
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சமூக வலைத்தளங்களில் மாத்திரம் சிறிலங்கா அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.
எவ்வாறாயினும், மக்கள் ஆணையுடனான அதிபராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவு செய்யப்படுவார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அதிகளவான மக்கள் தற்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக வெளியாகியுள்ள கருத்துக்களை அவர் நிராகரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
குறிப்பிட்ட தொகுதிகளில் மாத்திரம் தேசிய மக்கள் சக்திக்கு, மக்கள் ஆதரவு இருப்பதாக நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சென்ற தரப்பினர் வேவ்வேறு அரசியல் கட்சிகளுடன் தற்போது இணைந்து கொண்டுள்ளதாகவும், சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இந்த நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும், இந்த தேர்தலுக்கு முன்பாக பொது தேர்தலை நடத்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிடுவதாகவும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கட்சியுடன் இணைந்து, அதிபர் தேர்தலை ஒத்திவைப்பது ரணில் விக்ரமசிங்கவின் திட்டமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது பலர் கை கோர்த்திருப்பதாகவும், இந்த ஆதரவுடன் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தமது கட்சி வெற்றி பெறுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |