ரணில் மீண்டும் அதிபராக வேண்டும் : பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு
சிறிலங்காவின் அதிபராக அனுபவமற்ற ஒருவரை தெரிவு செய்து மீண்டும் நாட்டின் நிலையை மோசமடைய செய்ய முடியாதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, நாட்டின் நிலையை மேம்பட செய்துள்ள தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை அபிவிருத்தி செய்ய மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பில், கட்சி இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் வேட்பாளர்
இந்த நிலையில், ஒரு நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிபர் நியமிக்கப்படுவதாக பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய முன்வராத தரப்பினர் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பல நடவடிக்கைகளை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
மற்றுமொரு வாய்ப்பு
இவ்வாறாக பொறுப்புடன் செயல்படும் சிறிலங்காவின் அதிபருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், போட்டியிடுவது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை ரணி்ல் விக்ரமசிங்க இதுவரை மேற்கொள்ளவில்லை என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளதோடு, வேட்பாளராக களமிறங்கும் பட்சத்தில் அவருக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |