இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பிரித்தானியா இணக்கம்
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளையும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களையும் மேம்படுத்துவதற்கு பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கல்வித்துறையில் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிப்பது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள்
இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கு இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு பற்றி இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகரை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
கல்வி, வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மருந்துகள், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் பிரித்தானியாவின் முதலீட்டை இலங்கை ஊக்குவிக்கிறது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து ஆங்கில மொழி கற்பித்தல் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் அன்ட்ரூ பேட்ரிக் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் சியோபன் லதம் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.