கோட்டாபயவின் அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன்! யாரிற்கு இந்த சர்வகட்சி மாநாடு?
கொழும்பில் நாளைமறு தினம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்ற மாட்டார் என்பதை அரச தலைவர் செயலகத்துக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் (C.V.Wigneswaran) தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில்தான் தங்கியுள்ளது என்பதை அரச தலைவரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், தற்போதைய பொருளாதாரச் சூழல் தொடர்பில் எனது கருத்துக்களை எழுதுமாறு தொலைபேசி மூலம் உங்களின் பணியாளர் என்னை வலியுறுத்தினார். எனவே எனது கருத்துக்களை மிக சுருக்கமாக கீழே தருகிறேன்.
“இன்று நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பது சற்றே அசாத்தியமான விடயம்தான். நாட்டை தன் சக்திக்கு மீறி செலவு செய்ய வைத்துள்ளது.
இந்தப் போர். பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் கடன் வாங்கப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே சாத்தியமான வழி, கூட்டாட்சி அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதுதான் என்பது எனது புரிதல்.
அவ்வாறு செய்வது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு வழி வகுக்கும் என்பது மட்டுமன்றி, இலங்கையை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு வளமான மற்றும் அமைதியான நாடாக மாற்றுவதற்கும் வழி வகுக்கும்.
நீங்கள் சிந்திக்கும் அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக உண்மையான அதிகாரப்பகிர்வைத் தைரியமாக நிறைவேற்ற முடிந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண பொருளாதார ஆதரவையும் புலம்பெயர் தமிழர்களின் முழு மனதுடன் ஆதரவையும் பெற முடியும்.
அவ்வாறு செய்வதன் மூலம், இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டு தெற்காசியாவின் சொர்க்கமாக மாறும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
இனப்பிரச்சினை தொடர்பில் நாம் அனைவரும் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் எமது மனங்களில் இருந்து துடைக்கப்படட்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வந்து இந்த நாட்டை தெற்காசியாவில் மட்டுமன்றி முழு உலகிலும் ஒரு சிறந்த, வளமான, ஒன்றுபட்ட நாடாக மாற்றுவோம்.
இது வெறும் கனவு அல்ல; அது நிஜத்தில் நடக்கலாம். நீங்கள் துணிச்சலுடன் செயற்பட்டு இந்த நாட்டில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுவீர்களாயின் இலங்கை வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
அரச தலைவர் அவர்களே! உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நன்றி!" என்று அவர் தனது கருத்தினை அரச தலைவரிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
அத்துடன் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்க, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.