திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இரத்தக்களரியை ஏற்படுத்தும்: மிரட்டும் சரத் வீரசேகர
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இன மோதலுக்கு வழிவகுத்து இரத்தக்களரியை ஏற்படுத்தும். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என மிரட்டும் தொனியில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மாவட்ட நீதிமன்றங்களில் காவல்துறையினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், வடக்கில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன.
இரத்தக்களரி
வடக்கு நீதிமன்றங்கள் இப்படியான கட்டளைகளைத்தான் வழங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எனினும், காவல்துறையினர் தமது கடமைகளை உரிய வகையில் செய்து வருகின்றனர்.

வடக்கிலும், கிழக்கிலும் காவலதுறையினருக்குச் சவால் விடும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். அவர்களைத் திருத்தவே முடியாது.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இன மோதலுக்கு வழிவகுத்து இரத்தக்களரியை ஏற்படுத்தும் என்பதைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றார்.