தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அதிக மக்களை திரட்டிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
சிறிலங்காவில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மக்களை ஒன்று கூட்ட வேண்டாம் என்று தெரிவித்துள்ள போதிலும் அபிவிருத்தி என்னும் போர்வையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (viyalendran) அதிக மக்களை திரட்டி கூட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
தற்போது சிறிலங்காவில் உள்ள பொது இடங்களில் குறிப்பாக ஆலயங்கள் திருமண வைபவங்கள் மரண வீடுகளுக்கெல்லாம் குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே பங்கு பெறலாம் என தெரிவிக்கின்ற போதிலும் இவ்வாறான கூட்டங்களுக்கு எவ்வாறு அதிகளவானோரை திரட்ட அனுமதி வழங்கியது யார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கை நாட்டில் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமுமா என அவர்கள் கேள்வி எழுப்பியதுடன் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் தொழிலாளர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்ற போதிலும் நாட்டில் கொரோனவை ஒழித்து விட வேண்டும் என்று மார்தட்டிக் கொண்டு திரிபவர்கள் இவ்வாறு அதிகளவான மக்களை கூப்பிட்டு கூட்டம் போடும் போது கொரோனா தொற்று ஏற்படாதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணி கூட்டத்திலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் இது போன்ற நிகழ்வுக்கு அதிகளவான மக்களை திரட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளமை தொடர்பில் கொவிட் செயலணியின் பதில் என்ன எனஅவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


