72 வருடமாக ஏமாற்றத்தில் தமிழர் தரப்பு - கவலை வெளியிட்டார் முன்னாள் எம்.பி
கடந்த 72வருடங்களாக நீதி கோரிய எமக்கு ஏமாற்றமே கிடைத்துள்ள நிலையில், இன்று சர்வதேசத்திடம் நீதிகோரி போராடி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு நீதிவேண்டி முன்னெடுக்கப்படும் உணவுத்
தவிர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்பாக, அன்னை பூபதி உயிர்நீர்த்த இடத்தில் இருந்து இந்தப் போராட்டம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்திற்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள், தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் உட்பட பலர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பிகை அம்மாயாரின் நீதிவேண்டிய உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை பிரித்தானியா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் வடகிழக்கில் இந்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.