அடுத்த அதிபர் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட தீர்மானம்
இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் அதிபர் தேர்தல் தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளுடனும் கலந்துரையாடி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மன்னாரிலுள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று(5) ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே, அடுத்த அதிபர் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட விடயங்கள் ஆராய்வு
அத்தோடு, இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பணிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது, மயிலத்தமடு மக்களின் காணி விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான இக்கூட்டத்தில் ரெலோவின் சார்பாக கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா), கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேன், ஈபி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவர் இரா.துரைரட்னம், புளொட் கட்சி சார்பாக கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், கட்சியின் செயலாளர் ஆர்.ராகவன், தமிழ் தேசியக் கட்சியின் சார்பாக கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன், கட்சியின் பேச்சாளர் கணேசலிங்கம் துளசி, கட்சியின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் நாகலிங்கம் நகுலேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.