கச்சதீவு பெருந்திருவிழா குறித்து கலந்துரையாடல்
எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு (Kachchatheevu) பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்றையதினம் (07.02.2025) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட செயலர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பதில் மாவட்ட செயலர் ம.பிரதீபன், “கச்சதீவு பிரதேசத்தை பொது மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தல் குறித்தான நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளார்கள்.
குடிநீர் விநியோகம்
இந்த திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. குடிநீர் விநியோகம் மற்றும் மலசலகூட வசதிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இவ்வருடம் இலங்கையை சேர்ந்த 4,000 யாத்திரிகர்களும் இந்தியாவை சேர்ந்த 4,000 யாத்திரிகர்களும் என மொத்தமாக 8,000 யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர் என ஆயிரம்பேர் உள்ளடங்கலாக 9,000 பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன் இதில் கலந்து கொள்பவர்களுக்குரிய உணவு வசதிகள் குறித்து ஆராயப்பட்டது.
அந்தவகையில் யாத்திரிகர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவும், 15ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர், யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படையின் பிரதி தளபதி, காவல்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொணடனர்.
மேலதிக செய்திகள் : பு. கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)