உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் அரசு...! புதைந்த மக்கள்: சாடுகிறார் எம். ஏ. சுமந்திரன்
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran ) தெரிவித்துள்ளார்.
முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயலை அரசாங்கம் முன்னெடுக்க கூடாது என்றும் எம். ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பரிதாபகரமான சம்பவங்கள்
அவர் மேலும் கூறுகையில், மலையகத்துக்கு சென்றபோது பரிதாபகரமான சம்பவங்கள் தொடர்பில் அறிந்து கொண்டோம்.

சில இடங்களில் முழு கிராமமே புதையுண்டன. அந்த நேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பிப் பிழைத்துள்ளனர்.
அங்கிருந்த ஒருவர் தனது முழு குடும்பமும் புதையுண்டதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை என்றும் எப்படியாவது தமது குடும்பத்தினரின் உடல்களை மீட்க வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களாக போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
அங்கு சிலர் தமது பணத்தைக் கொடுத்து இயந்திரங்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பல கிராமங்கள் பேரழிவு
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) கண்டி அரசாங்க அதிபரை சந்தித்த போது கம்பளையில் 19 பேர் தான் உயிரிழந்தனர் என்று சொல்கிறார்.

நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 50 இற்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளனர் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன. அந்த பகுதிகளில் மக்கள் மீளவும் வாழ முடியாத வகையில் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் பெரும் இழப்புகள் ஏற்பட்டமையை எங்களால் காண முடிந்தது. எம்மைக் கண்டதும் அங்குள்ள மக்கள் தமது கஷ்டங்களை கண்ணீருடன் கூறினர்.
நிவாரண பணிகள்
அந்தப் பகுதியில் உடனடி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறிய முடிந்தது.

இதனை நாங்கள் கூற வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. அரசாங்கத்தை குறை சொல்வதற்காக சொல்லவில்லை.
மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடைய வேண்டும். மக்களின் உயிரிழப்புகள் எத்தனை என்று தெளிவாகத் தெரிய வேண்டும் - என்றார
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |