அறுகம்குடாவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : முற்றாக மறுக்கும் காவல்துறை
உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் பொது இடங்களில் பிகினிகள் அணிவதை தடை செய்யும் புதிய சட்டம் அறுகம்குடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை காவல்துறை முற்றாக மறுத்துள்ளது.
'அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்' என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு பதிவில், அப்பகுதியில் பிகினிகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிகினிகள் அணிவதற்கு தடை
"அறுகம் குடாவிற்கு வரவேற்கிறோம்! உங்களை இங்கு சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் வருகையை உண்மையிலேயே மதிக்கிறோம். எங்கள் உள்ளூர் கலாசாரத்தை மதிக்கும் வகையில், பொது இடங்களில் பிகினிகள் அணிவதைத் தவிர்க்குமாறு நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் மரபுகள் மீதான உங்கள் மரியாதை எங்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும் அழகான அறுகம் குடாவில் உங்கள் நேரத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம்!" என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், கொழும்பு ஊடகமொன்று பொத்துவில் காவல்துறையின் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டபோது, அவர் அந்தக் கூற்றை மறுத்து, அத்தகைய தடை எதுவும் இல்லை என்று கூறினார்.
விசாரணை தொடங்கப்பட்டுள்ளது
இந்தப் பதிவு ஒரு தனிநபரால் பகிரப்பட்டது என்றும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அறுகம் குடா, குறிப்பாக நீச்சல் சறுக்கலுக்கு(surfers) மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் வலுவான அலைகளுக்கு பெயர் பெற்றது. அறுகம் குடா உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான இடமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

