யாழில் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் : காவல்துறையினரின் அசமந்தம்
தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினர் அசமந்தமாக செயற்படுவதாகவும் வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பகுதியில் இருக்கும் நபர் ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த வேளை, குறித்த நபரின் மகன் மற்றும் அவரது உதவியாளரான பெண்ணொருவரும், அவசர சிகிச்சை பிரிவினுள் நுழைந்து நோயாளியை தனியார் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதற்கு உரிய நடைமுறைகளை பின் பற்றியே நோயாளிகளை மாற்ற முடியும் எனவும், குறித்த வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டியை நோயாளி சார்பிலானவர்களே வரவழைத்து அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி குறித்த பெண் வைத்தியர்களை தாக்க முற்ப்பட்டுள்ளார்.
அதன் போது வைத்தியர்கள், ஒருவர் மாத்திரமே அவசரசிகிச்சை பிரிவில் நோயாளரை பார்வையிட அனுமதி என கூறி உதவியாளர் என கூறி வந்த பெண்ணை வெளியே செல்லுமாறு பணித்துள்ளனர்.
அதற்கு அப்பெண் வைத்தியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, தமக்குள்ள அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி உங்கள் அனைவருக்கும் நடவடிக்கை எடுப்பேன் என கூறி மிரட்டியுள்ளார்.
செயற்பாடுகளுக்கும் இடையூறு
அத்தோடு, வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு இடையூறு விளைவுக்கும் முகமாகவும் நடந்து கொண்டுள்ளார்.
மேலும், வைத்தியசாலையில் செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த பெண் மற்றும் அவருடன் சென்ற நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்காது காவல்துறையினர் தொடர்ந்து அசமந்தமாக செயற்பட்டு வருவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடக்கிற்கு பொறுப்பான காவல் உயர் அதிகாரிகளுடன் செல்வாக்கு மிக்க நபராக உள்ளதால், குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்வதனை தடுக்கும் வகையில் தெல்லிப்பழை காவல்துறையினருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழலற்ற அரசாங்கம் என கூறி வரும் தேசிய மக்கள் சக்தியினர், இவ்வாறு உள்ளூர்களில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பெயரை பயன்படுத்தி, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
