தமிழ் பேசும் கட்சிகளுக்குள் நடந்தது என்ன? இறுதித் தருணத்தில் கைவிரிப்பு
இலங்கையில் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு இறுதித் தருணத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன மறுத்துள்ளமை பேசு பொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டியே அமைய வேண்டும் என வலியுறுத்திவந்த மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்த ஆவணத்தில் கையெழுத்திடாமை குறித்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கரிசனை கொண்டுள்ள தரப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
எனினும் ஆவண தயாரிப்புக்கான பேச்சுக்களில் பங்கெடுத்த ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கென தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பங்காளிக் கட்சியான டெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கட்சித் தலைவர்களின் ஒப்புதல்களுக்காக அனுப்பட்ட போதிலும் அதில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ்சும் மலையக கட்சிகளும் மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் குறித்த இரண்டு தரப்பினரது கையொப்பங்கள் இன்றி, தமிழ் தேசிய கட்சிகள் மாத்திரம் கையெழுத்திட்ட ஆவணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் குறிப்பிட்டார்.
எனினும் இந்தப் பேச்சுக்கள் ஊடாக முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்றுமையை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
You May Like This