'சர்வகட்சி அரசாங்கம்' ரணிலின் அறிவிப்பில் பாரிய சந்தேகம்
சர்வகட்சி அரசாங்கத்தின் காலம் குறித்து பாரிய சந்தேகம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் அடுத்த மூன்று வருடங்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என தற்போதைய அதிபர் அறிவித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தின் காலம் குறித்து பாரிய சந்தேகம் நிலவுகிறது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் வெவ்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும் அதிபர் ரணில், சர்வகட்சி அரசாங்கம் செயற்படப்போகும் காலப்பகுதி குறித்து இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை.
குறுகிய காலத்திற்கு மாத்திரமே ஒத்துழைப்பு வழங்க முடியும்

சர்வகட்சி அரசாங்கம் குறித்த ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முன்னதாக இந்த விடயம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிப்பது முக்கியமானதாகும்.
எந்தவொரு கட்சியும் சர்வகட்சி அரசாங்கத்திற்காக குறுகிய காலத்திற்கு மாத்திரமே ஒத்துழைப்பு வழங்க முடியும். நீண்ட காலத்திற்கு அவ்வாறான ஒத்துழைப்பை வழங்க முடியாது.
கட்சியின் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு உட்பட்டு மாத்திரமே குறித்த ஒத்துழைப்பை வழங்க முடியும்” என்றார்.