டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி அரசியல்: சிவஞானம் சிறீதரன் கண்டனம்!
“கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகள் இன்று நேற்று அல்ல அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே தமிழர்களுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளை கொண்டவர் என்று வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வுக்காக கடந்த (05)திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
அடாவடி அரசியல்
இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களை தாக்கியும் உள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடக சந்திப்பொன்றை நேற்று(7) நடத்திய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அவருடைய சண்டித்தன அரசியல் அல்லது அடாவடி அரசியல் என்பது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி என பல இடங்களில் அவர் நடந்து கொண்ட விதங்கள் மற்றும் முறைகள் எல்லோராலும் உணரபட்டவைதான் அதனால்தான் அவர் ஒரு தமிழ் தலைவராக வரமுடியவில்லை.
தமிழ் மக்களுடைய வளங்கள்
அவர் ஒரு நியாயமான கௌரவமான தமிழ்மக்களுடைய அபிலாசைகளை பிரதிநிதித்துவபடுத்துகின்ற ஒரு அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை அடையாளப்படுத்தியிருந்தால் தமிழ்மக்களுடைய வளங்களை கொள்ளையடிக்காமல் தமிழ் மக்களுடைய வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு பேணி வைத்திருக்க வேண்டும்.
இது எங்களுடைய சொத்து எமது இனத்திற்கானது என்பதை அவர் பின்பற்றியிருந்தால் அவர் இன்று தமிழ் மக்களால் போற்றி புகழப்பட்டிருப்பார்.
ஆனால் தமிழர்களுடைய நிலங்களை அபகரிப்பதிலும் மணல் எடுத்து விற்பதிலும் இப்பொழுது கல்லை தோண்டி விற்பதிலும் அதிகமான கரிசனை கொள்ளுகின்ற அமைச்சராக தன்னை அடையாளப்படுத்துவது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல.
அடுத்த சந்ததியினர்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமமானது பாரம்பரியமான ஈழவுர் என்கின்ற சரித்திர பிரசித்தி வாய்ந்த வரலாற்று அடிப்படைகளை கொண்ட பூர்வீகமாக வாழ்கின்ற மக்களை கொண்ட மண்ணாகும்.
அந்த பூர்வீக கிராமங்களில் இருக்கின்ற எத்தனையோ ஆண்டுகள் பேணி பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் சொத்தான முருகை கற்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்த முயற்சிப்பது மிகவும் மோசமானது எனவும் அது ஒரு இனத்திற்கு செய்கின்ற வரலாற்று துரோகம் ஆகும்.
கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை உணர்ந்து அடுத்த சந்ததிக்காகவாது அது தோண்டப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் அது எமது இனத்துக்குரியது என்பதை சிந்தித்து கொள்ளவேண்டும்.
பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலை வரவில்லை அதில் இருக்கும் முருகைகற்களை தோண்டி அதனை திருகோணமலைக்கு கொண்டு செல்ல போகிறார்கள் அதனால் பொன்னாவெளி கிராமத்தில் ஆலமான உப்புதண்ணீர் நிரம்பிய கிடங்குகள் உருவாக்கப்படும் இதேபோல் தான் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தில் இவ்வாறான கல் எடுக்கப்பட்ட ஆழமான கிடங்குகள் உண்டு.
பொன்னாவெளி கிராமம்
இதை விட மோசமாக பொன்னாவெளி கிராமத்தில் ஆழமான கிடங்குகள் கடலுக்கு அருகிலே தோண்டி கடல்நீர் கிராமத்திற்குள் உட்புகும் நிலமை உருவாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
அக்கிரம மக்கள் தொடர்ந்தும் அந்த மண்ணிலே வாழ முடியாமல் இடமபெயர்கின்ற சூழ்நிலை உருவாகும் எனவும் எனவே இவ்வாறான செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |