அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை
சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மரண தண்டனையை இரத்து செய்து, மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
முகநூல் பதிவொன்றில் கருத்து தெரிவித்துள்ள நபர் ஒருவர், இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அனோஜன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும், தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான கோரிக்கை
எந்தவொரு நபரும் தான் சாராத மதத்தையும் அதன் தூதரையும் அவமதிக்கக் கூடாது எனவும், மதங்களை கண்ணியப்படுத்துவது அவசியம் எனவும் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அனோஜன் தனது செயலுக்காக பொது மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதால், அவரது பெற்றோரின் மனிதாபிமான கோரிக்கையையும் கருத்திற்கொண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதனை இரத்து செய்து பொது மன்னிப்பு வழங்குவதுடன், அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |