5 மாணவர்கள் கொலைக்கு நீதி கோரிய தந்தையின் மரணம் - தமிழரசுக் கட்சியினர் அஞ்சலி
திருகோணமலையில் (Trincomalee) படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் உயிரிழந்த வைத்தியர் மனோகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய மாணவர்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள்
சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரி இருபது ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வந்த வைத்தியர் மனோகரனின் முயற்சிகளை நினைவுகூரும் வகையில், இன்னும் நீதி அளிக்கப்படாத அந்தக் கொடூர சம்பவத்தை வெளிப்படுத்தும் வகையில் குறித்த நினைவேந்தலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள், உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
