திருகோணமலையில் வறட்சியின் பிடியில் விவசாயிகள்...! கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குளம் தற்போது வறண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.
கடுமையான நீர்ப்பற்றாக்குறை
குளம் முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சின்ன மகமார் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று (31) மாலை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி அவர்களின் மூலமாக குடிநீர் பவுசர் மூலமாக நீர் விநியோகம் இடம் பெற்றன.
நீண்ட காலமாக நிலவி வரும் வரட்சியால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை
இதனையடுத்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு அவசர தேவையாக குடிநீர் பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட தேவைகளுக்குக் கூட நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வறட்சி நிலை நீடிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |