கஞ்சாவுடன் பிடிபட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் - பொன்னாலை ஊடாக காரைநகருக்கு கஞ்சா கொண்டுசென்றவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்ற போது, குறித்த நபர் கஞ்சாவையும் கைத்தொலைபேசியையும் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் இன்று (04) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த நபர் கஞ்சா கொண்டு செல்கின்றார் என பொன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை வழிமறித்த இளைஞர்கள் விசாரணை நடத்தினார். இதன்போது அவரிடம் கஞ்சா இருந்தமை கண்டறியப்பட்டது.
அவரை வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டுசென்றபோது திடீரென்று அவர் காரைநகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.
இது தொடர்பாக வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் கஞ்சாவும் கைத்தொலைபேசியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைத்தொலைபேசியை வைத்து குறித்த நபரைக் கைது செய்வதற்காக நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

