தங்காலையில் மீட்கப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள்: மற்றுமொரு சந்தேகநபர் கைது!
தங்காலை, சீனிமோதர மற்றும் கொடவெல்ல பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் படகொன்றுடன் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை வெளிநாட்டிலிருந்து டோலர் படகு மூலம் கொண்டுவரப்பட்டு, பின்னர் ஒரு சிறிய மீன்பிடிப் படகு மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொடரும் விசாரணை
அதன்படி, குறித்த சிறிய மீன்பிடிப் படகின் உரிமையாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி தங்காலை, சீனிமோதர மற்றும் கொடவெல்ல பிரதேசங்களில் வைத்து 10 பில்லியன் ரூபாய் பெறுமதியான 705 கிலோ 170 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றுள், 284 கிலோ 410 கிராம் ஹெரோயின் மற்றும் 420 கிலோகிராம் 760 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் உள்ளடங்குகின்றன.
தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் வீடொன்றினுள் இருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
