கஜேந்திரகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை (Gajendrakumar Ponnambalam) நேரில் சந்திப்பதற்கு அந்தக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Dharmalingam Siddarthan) வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சி மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
இது குறித்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில், ''உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. தமிழ் மக்கள் அம்மூன்று தரப்புக்களுக்கே அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் சபைகளின் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக விட்டுக்கொடுப்புடன் இம்மூன்று தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகின்றது. அந்த வகையில் தான் நாம் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
நேரில் சந்திப்பு
குறித்த உடன்பாட்டுக்கு அமைவாக வடக்கு, கிழக்கில் நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புக்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதேவேளை, நாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான முன்னணியுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம்.
அதற்காக நானும், செல்வம் அடைக்கலநாதனும் (Selvam Adaikalanathan) அவரை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. அதன்போது நாம் கொள்கை தொடர்பான விடயங்களையும் நேரில் தெளிவுபடுத்தி பேச்சுக்களை முன்னெடுப்போம்'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
