யாழ். நாவலர் மண்டபத்திற்கு முன் கொட்டப்படும் கழிவுகள் - மாநகரசபையின் அசமந்தம்
நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் இனம் தெரியாத நபர்கள் கழிவுகளை கொட்டுவதனால், அப்பகுதி கழிவுகள் நிறைந்த இடமாக காணப்படுகிறது.
யாழ். மாநகர சபையினரின் (Jaffna Municipal Council) பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபம் மற்றும் அதன் வளாகத்தில் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியம் ஆகியவற்றுக்கு முன்பாக வீதியில் இனம் தெரியாத நபர்கள் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
வீதியால் செல்வோர் அசௌகரியங்கள்
அவ்வாறு கொட்டப்பட்டும் கழிவுகள் மாநகர சபையினரால், அகற்றப்படாத நிலையில், அவை வீதிகளில் சிதறுண்டு காணப்படுவதால், வீதியால் செல்வோரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அதேவேளை, நாவலர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு வருவோரும், தொல்பொருள் அருங்காட்சியத்தினை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளும், வீதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை தாண்டியே சென்று வருகின்றனர்.
அதனால் அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவோரை இனம் கண்டு கடுமையான நடவடிக்கையை மாநகர சபை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
