உலகில் அதிக வருமானம் ஈட்டாத விமான சேவை நிறுவனங்கள்: அமைச்சர் சுட்டிக்காட்டு
உலகில் உள்ள எந்தவொரு விமான சேவை நிறுவனங்கள் அதிக வருமானத்தை ஈட்டுவதில்லை என சிறிலங்கா துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் உலகின் மிக பணக்கார நாடுகளில் உள்ள சில விமான சேவை நிறுவனங்கள் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்று (08) நாடாளுமன்றில் உரையாற்றிய நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எயர் இந்திய நிறுவனம் (Air India) நஷ்டங்களை எதிர்நோக்கியதன் காரணமாக டாடா நிறுவனத்துக்கு(TATA) விற்பனை செய்யப்பட்டதாக சிறிலங்கா துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
போதுமான நிதி
இந்த நிலையில், சிறிய நாடான இலங்கையின் விமான நிறுவனங்களை பராமரிப்பதற்கு போதுமான நிதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானங்களை வாங்க இலங்கைக்கு போதிய நிதி இல்லை எனவும் இந்த துறையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் விமானங்களை குத்தகைக்கு மாத்திரம் எடுப்பதாக நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைவாய்ப்பு
பாரிய முதலீடுகளை கொண்டு வரக்கூடிய தரப்பினருடன் இணைந்து இலங்கை எதிர்வரும் நாட்களில் செயல்பாட வேண்டுமெனவும் இதன் மூலம் சுமுார் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 791 இலங்கையர்களை மாத்திரம் சேவைக்கு இணைத்துக் கொண்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டின் இறுதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines) 609 மில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்த பின்னணியில், அதே ஆண்டில் பெருந்தொகையானோர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |