விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ஏவுதல் இடம்பெறவுள்ளது.
EOS-05 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுப்பாதையில் சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
EOS-05 செயற்கைக்கோள்
பூமியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிப்பதற்கும், பேரிடர் மீட்புப் பணிகளை விரைவாகத் திட்டமிடுவதற்கும் உதவும்.

மேலும், சுமார் 30 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட நிகழ்நேரப் புவிப் படங்களை வழங்கும் திறன் இந்த செயற்கைக்கோளுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், முக்கியமான புவியியல் தகவல்களைப் பெறவும் முடியும்.
இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட EOS-03 (GISAT-1) செயற்கைக்கோள், GSLV ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையாமல் தோல்வியடைந்தது.
அதன் தொடர்ச்சியாக, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய EOS-05 (GISAT-1A) திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.
சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர் இஸ்ரோ மீண்டும் செயற்கைக்கோள் ஏவுதலை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியாவின் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை திறன்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |