கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் (Canada) பிரிட்டிஷ் கொலம்பிய (British Columbia) மாகாணத்தின் கரையோர பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மாகாணத்தில் பதிவான இந்த நிலநடுக்கங்கள் ஒரே நேரத்தில் இரண்டு தடவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், முதலாவது நில அதிர்வு 6.4 ரிச்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க மற்றும் கனடிய பூமி அதிர்வு கண்காணிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இதேவேளை, முதல் நில அதிர்வு பதிவாகி 30 நிமிடங்களில் மேலும் ஒரு நில அதிர்வு 4.3 ரிச்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
நில அதிர்வு
இந்த நிலையில், நில அதிர்வு நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக காலநிலை ஆயத்த மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் போவின் மா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கனடாவில் வருடம் ஒன்றில் ஆயிரக்கணக்கான நில அதிர்வுகள் பதிவாகின்றன எனவும் அதில் அனேகமானவை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடிக்கடி நில அதிர்வு இடம் பெறும் பகுதிகளில் மக்கள் ஆயத்த நிலையில் இருப்பது சிறந்தது எனவும் அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |