சர்வதேச நம்பகத்தன்மையை உருவாக்காவிட்டால் விசாரணை குழுக்களை அமைப்பதில் பயன் இல்லை
இலங்கையின் மீது சர்வதேச நம்பகத்தன்மையை உருவாக்காவிட்டால் விசாரணை குழுக்களை அமைப்பது எல்லாம் அர்த்தமற்ற செயற்பாடுகளாகிவிடும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(13) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிபரின் ஆணைக்குழுக்களின் ஊடாக இலங்கை நாட்டின் மீது சர்வதேச நம்பகத்தன்மையை உருவாக்க முடியாவிட்டால் இலங்கை இழந்துபோன கௌரவத்தை மீளப்பெற முடியாவிட்டால், இந்த விசாரணைக் குழுக்கள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டு செல்லும் செயற்பாடு
“தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நிராகரிப்பதாகவும் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் நாட்டை மேலும் வங்குரோத்து நிலைமைக்கே இட்டுச் செல்லும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரணைகளை நடாத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும் நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
இந்த குழுக்களின் அறிக்கைகள் முழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளியிடப்படவில்லை. அவற்றை முழுமையாக வெளியிட முடியாது என்று கூறியுமிருந்தனர்.
பின்னர் கோட்டாபய ராஜபக்சஅதிபராக வந்தபொழுது அவரும் ஒரு விசாரணைக்குழவை நியமித்தார். அதிலும் எத்தகைய வெளிப்படைத்தன்மையுமில்லை.
மக்களுக்கும் அதுபற்றி எதுவும் தெரியாது.
பாதுகாப்பு அமைச்சர்
இப்பொழுது மூன்றாவது முறையாக அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க இருப்பதுடன், நீதிபதிகளை உள்ளடக்கிய மற்றொரு விசாரணைக்குழவையும் நியமிக்க உள்ளார்.
இந்நிலையில், அதிபர் பாதுகாப்புத்துறையின் அமைச்சராகவும் இருக்கிறார்.
ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தொடர்பாக சனல்4 வெளியிட்ட ஆவணக் காணொளியை பாதுகாப்பு அமைச்சு முற்றாக நிராகரிப்பதாகக் கூறியுள்ள நிலையில், அதிபர் மறுபுறத்தில் அதற்கான விசாரணை ஆணைக்குழுக்களை நியமிப்பது வேடிக்கையாகவும் முரண்நகையாகவும் இருக்கின்றது.
ஏற்கனவே சிங்கள தரப்பில் பல்வேறு கட்சித்தலைவர்களும் பொது அமைப்புகளின் தலைவர்களும் தமிழர் தரப்புகளும் சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள ஒரு சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் பல மில்லியன் ரூபாய் மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்து, விசாரணைக்குழுக்களை அமைப்பது அர்த்தமற்றதும் காலத்தை வீணடிக்கும் செயலுமாகும்.
சர்வதேச விசாரணை
யுத்தத்திற்குப் பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் தமிழ் மக்கள் ஒரு சர்வதேச விசாரணையை இன்றுவரை கோரிவருகின்றனர்.
இந்தியா போன்ற அயல் நாடுகளும் நேரடியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் தமிழ் மக்களின் கௌரவம் பாதுகாக்கப்படவேண்டும், சமத்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
அவர்களது அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதுடன், மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் சர்வதேச அரங்குகளில் சுட்டிக்காட்டி வருகின்றன.
ஆனால் இலங்கை அரசாங்கமோ இவற்றைக் காலதாமதப்படுத்துவதிலும் ஒத்தி வைப்பதிலும் தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிக்கும் நடவடிக்கைகளிலுமே ஈடுபட்டு வருகின்றது.
ஆகவே, நாட்டின் நன்மைகருதியும் பொருளாதார அபிவிருத்தி கருதியும் இவை எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்தமான தீர்வைக் காணும்முகமாக சர்வதேச விசாரணை என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.
அதிபரும் அரசாங்கமும் இதனைப் புரிந்துகொண்டு கடமையாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்றார்.