ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிக்கு பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார்? ஆரம்பமானது விசேட விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் அடையாளம் காணப்பட்ட மொஹமட் இப்ராஹிம் முகமது நவ்பருடன் தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளைக் கண்டறிய புலனாய்வு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (சிஐடி) தற்போது சிறப்பு விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரதெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக மொஹமட் இப்ராயிம் மொஹமட் நவுஃபர், கட்டாரில் தங்கியிருந்ததாகவும், இந்த நபருடன் கட்டார் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள் யார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டு முதல் மொஹமட் நவ்பர், அபுபக்கர் அல் பெக்டாட்டின் கொள்கைகளை, சஹ்ரான் பின்பற்றுவதற்கு குறிப்பிடத்தக்களவு பொறுப்பாக இருந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.. சஹ்ரானுடன் தொடர்புகளை பேணி, ஈஸ்டர் தாக்குதலை குறித்த சந்தேகநபர் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சஹ்ரானுக்கு அரசியல் புகலிடம் வழங்க தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளுக்கும் மொஹமட் நவ்பர் உடன் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய இந்த சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வீரசேகர மேலும் தெரிவித்தார்.