உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்புலம் தொடர்பில் வெளியான தகவல்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் என்பது வெறுமனே பயங்கரவாத தாக்குதல் கிடையாது எனவும் அது அரசியல் ரீதியான தாக்குதல் எனவும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் மற்றும் தாக்குதல் நடந்த பின்னர் இடம்பெற்ற அரசியல் கள நிலவரங்களை ஆராய்ந்து பார்க்கும் போது இவ்விடயம் தௌிவாவதாக அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
சஹரான் உள்ளிட்ட குழுவினர் நீண்ட காலமாக களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அடிப்படைவாத கருத்துக்களை முன்வைத்து வந்ததாகவும் அதனை அப்போதைய அரசாங்கம் கவனத்தில் எடுத்திருந்தால் தாக்குதலை தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனால் இந்த தாக்குதலை தடுத்திருக்க வேண்டிய பொறுப்பை நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அனைவரும் ஏற்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்து ஒரு குழு அல்லது சக்தி இயங்கியதை சாட்சி அளித்த அனைவரும் கூறியபோதும் அது குறித்து விரிவான விசாரணையை நடத்த ஆணைக்குழு தவறியுள்ளமை பாரிய குறைபாடு என அவர் தெரிவித்தார்.
தாக்குதலை தவிர்க்க முடியாமல் போனமைக்கான காரணங்களை சரிசெய்ய முடியும் ஆனால் சதித்திட்டம் குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் அவ்வறானதொரு தாக்குதல் இடம்பெறும் ஆபத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.