உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சிறிலங்காவில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அதனை அமைச்சரவையின் ஊடாகவோ அல்லது அலரிமாளிகையில் சந்திப்புக்களை நடத்தியோ மேற்கொள்ள முடியாது எனவும் நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவே அதனைச் செய்ய முடியும் எனவும், அதற்கு சிறிது காலம் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அருட்தந்தை சிறில் காமியை ஏன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தார்கள் என என்னால் கூற முடியாது எனினும், நான் ஒரு கருத்தை வெளியிட்டால், அதுத் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இரகசிய பொலிஸாருக்கு இயலும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் சிறப்பாகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் உலகில் இவ்வாறான ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று, அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க எடுத்த காலத்தை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்க எடுத்த காலத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்.
எம்முடைய நீதிமன்றக் கட்டமைப்பின் கீழ் எந்தவொரு தீவிரவாத விடயங்களுக்கு எதிராகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட காலம் செல்லும்.
எனினும் அதனை எம்மால் முடிந்தளவு குறைத்துக்கொள்ள முடியுமே தவிர, பெரும்பாலும் அந்தக் காலத்தை குறைத்துக்கொள்வது என்பது சாத்தியமில்லை.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டியது எமது அரசாங்கத்தின் பொறுப்பு” என அவர் கூறியுள்ளார்.