காவல்துறை அதிகாரத்தினை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் : டக்ளஸ் திட்டவட்டம்
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரத்தினை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், "அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.
எனினும், அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவினால் இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிக படிமுறைகளை தாண்டி வரவேண்டியிருக்கின்றது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்."என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்