இலங்கையில் சமூக நீதி மறுக்கப்பட்டதனால்தான் பொருளாதார வீழ்ச்சியா..
இலங்கையில் பொருளாதாரம் மக்களின் கழுத்தை திருகிக் கொண்டிருக்கும் தருணத்திலும் சிறுபான்மை இனமான ஈழத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை இன்னமும் விரிந்தபடிதான் இருக்கிறது என்பது கசப்பான உண்மை.
அதுவே சிறிலங்கா தேசத்தின் அறம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய பாரிய வெளியைத் திறக்கிறது. ஒரு நாட்டின் ஆட்சியில்தான் சமூக நீதியின் இருப்பும் இயக்கமும் தங்கியிருக்கிறது.
ஆனால் இங்கு சிறிலங்கா அரசின் ஆட்சி என்பதே ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கி அழிப்பதில்தான் இருக்கிறது என்ற போது இங்கு சமூக நீதி குறித்த உரையாடலே பாதை மாறிவிடுகிறது. வாழ்வுக்கான பொருளாதார இருப்பு குறித்து அதிகம் நாம் சிந்திக்கும் இந் நாட்களில் சமூக நீதியின் நிலை குறித்தும் கரிசனை கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூக நீதி நாள்
பெப்ரவரி 20 சமூக நீதிக்கான உலக நாள். சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளில் அனுஷ்டிக்கப்படுகின்ற ஒரு தினமாகும்.
இந்த நாளில் வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும் முயற்சிகளும் சிந்தனைகளும் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதியின் முக்கியத்துவம் குறித்து அறிக்கைகளையும் திட்டங்களையும் தயாரிக்க வேண்டிய பொறுப்பை சுட்டுகிறது.
அந்த வகையில் உலக நீதி நாள் எனும் இந்நாள், ஐக்கிய நாடுகள் சபை, வருடம் தோறும் பெப்ரவரி 20 ஆம் நாளில் அவதானிக்க முடிவை மேற்கொண்டது. அதற்கான அங்கீகாரத்தை 2017, நவம்பர் 26 இல் ஐ.நா வழங்கியிருந்தது. எனினும் 2009 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படவேண்டும் என திட்டமிடப்பட்டது.
அந்த அடிப்படையில் உலக நாடுகளின் வறுமை நிலையும், அதனால் ஏழை எளிய மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களும் இந் நாளில் ஆராயப்படுகின்றது. ஏழை, பணக்காரன் என்ற பொருளாதார பாகுபாடுகளை இல்லாமல் செய்கின்ற எண்ணத்தை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
சமூக நீதி நாள் உருவான பின்னணி
உலகில் தொழிலாளர்களின் நலன் குறித்து சந்திக்கின்ற அமைப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. நியாயமான உலகமயமாக்கலுக்கான சமூக நீதி நாள் குறித்து அவ்வமைப்பு ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.
இந்த அமைப்பின் கரிசனையினாலும் அதன் சமூக நீதிக்கான எண்ணங்கள் மற்றும் செயற்பாடுகளினாலும் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை உருவாக்கும் சூழல் ஏற்பட்டது.
உலகில் மக்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை களைகின்ற போது பலம்மிக்க சமமான ஒரு உலகமயமாதல் நிலை ஏற்படும் என்றும் அதன் ஊடாக சமூக நீதி நிலைபெறும் என்றும் இந்த முயற்சிகளில் நம்பிக்கை கொள்ளப்படுகிறது. என்ற போதும்கூட அது தொடர்ச்சியாக உரையாடல்களுக்கும் கேள்விகளுக்கும் உரியதாகவே இருக்கிறது.
இந்த உலகில் பிறந்த எல்லோரும் சமூக நீதியில் சமமானவர்கள் என்ற அடிப்படையில்தான் இந்த நாள் உருவாக்கப்பட்டது. ஆண், பெண் என்ற வேறுபாடு இந்த உலகில் இருக்கக்கூடாது என்றும் அதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பால்நிலை வேறுபாடுகளினால் ஏற்படக்கூடாது என்றும் அந்த நாள் வலியுறுத்துகிறது.
அதைப் போலவே படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடுகளைக் களைவதும், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளைக் களைவதும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகளைக் களைவதும் இந்த நாளில் எண்ணமும் எதிர்பார்ப்புமாக இருக்கின்றது. சமூகத்தில் எல்லோரும் சமமானவர்கள் என்கின்ற நீதிச் சூழலை நடைமுறைப்படுத்தவே இந்த நாள் முனைகிறது.
வேறுபாடுகளால் ஆனது உலகம்
இந்த உலகத்தை நீரால் ஆனது என்று சொல்கிறோம். ஆனால் இந்த பூமிப்பந்தெங்கும் வேறுபாடுகளும் பாரபட்சங்களும்தான் பெருகிக் கிடக்கின்றன. அந்த அடிப்படையில் இந்த உலகத்தை வேறுபாடுகளால் ஆனது என்றே சொல்ல வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற பொதுவுடமை சிந்தனை ஆதிகாலத்தில் நிலவியிருந்த நிலையில், பொருள் படைத்தவர்களுக்கும் பொருளை வசமாகக் கொண்டவர்களுக்குமானதாக இந்த உலகம் இன்று மாறியிருக்கிறது.
அத்துடன் பொருள் மற்றும் அதிகாரத்தை தம் வசம் வைத்திருப்பவர்கள் மற்றவர்களை அடக்கி ஒடுக்குகின்ற நிலை தலையெடுத்திருக்கிறது.
ஆதிச் சமூகத்தில் தனியாட்களினாலும் மன்னர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அதிகாரம் புரிதல், தலையீடு செய்தல் என்பது இப்போது நவீன அரசுகளினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையை எட்டியிருக்கிறது.
இந்த தேசத்தில் சாதி இந்த வேறுபாடுகளை உருவாக்குவதிலும் சமூக நீதியை மறுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது என்றால் இலங்கையில் இனவாதம், அதேவேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.
இலங்கைச் சூழலில் பெரும்பான்மையினருக்கு இவைகள், சிறுபான்மையினருக்கு இவைகள் இல்லை என்ற வேறுபாடுகளும் பாரபட்சங்களும் மறுப்புக்களும் தலையெடுத்து இன்றைக்கு எழுபத்தைந்து ஆண்டுகளும் கடந்து விட்டன.
சமூக நீதி மறுக்கப்பட்டதன் விளைவா?
இலங்கை வரலாறு காணாத பொருளாதாரச் சரிவை அடைந்திருக்கிறது. என்னவோ எல்லாம் செய்த போதும், இலங்கையை மீட்க முடியாத நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சமூக நீதியின்மை தான் தேசங்களினதும் உலகத்தினதும் சரிவுகளுக்கும் வீழச்சிகளுக்கும் காரணமானவை என்று நம்பப்டுகிறது. அவையே தேச உருவாக்கங்களுக்கும் உலகமயமாதல்களுக்கும் தடையாக உள்ளதாகவும் கருதப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் அங்கு புரையோடிப்போயுள்ள சாதிய வேறுபாடுகளும் ஆதிக்கங்களும் அந்த நாட்டின் வளர்ச்சியை பின்தள்ளுவதில் முக்கிய பங்கை புரிகின்றது.
இதைப்போலவே இலங்கையிலும் சமூக நீதி மறுக்கப்படுகின்ற துயரம் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. சிங்களப் பெரும்பான்மையினம், ஈழத் தமிழ் மக்கள்மீது தாம் பெரும்பான்மையினர் என்ற மனநிலை கொண்டு புரிகின்ற சமூக நீதி மறுப்பு என்பது ஈழத் தமிழ் மக்களை பெரும் படுகொலைகளுக்குள்ளும் பொருளாதார சுறண்டல்களுக்குள்ளும் பண்பாட்டு அழிப்புக்களுக்குள்ளும் தள்ளியுள்ளது.
ஈழத் தமிழ் மக்களை அழிப்பதும் ஒடுக்குவதும் மாத்திரமே தம் ஒரே செயல் என்றிருந்த சிறிலங்கா தேசம் அத்தகைய சமூக நீதி மறுப்புப் போக்கால் இன்று பாரிய பொருளாதாரப் பின்னடைவையும் வீழச்சியையும் அறுவடை செய்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 20 February, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.