ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் படி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மார்ச் மாத இறுதிக்குள் அதற்கான ஆட்சேர்ப்பு நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தடை உத்தரவு
”ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் 10 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்புக் கிடைத்தால், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்.
20 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் வெற்றிடங்கள்
அத்துடன், சேவையை விட்டுச் சென்ற மற்றும் வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் காரணமாக மாகாண மட்டத்தில் 13 ஆயிரத்து 500 ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், விரைவில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும்” என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |