இலங்கையின் பொருளாதார மேம்பாடு: ரணிலின் அடுத்த கட்ட நகர்வு
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தனது பணி நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற இலங்கை காலநிலை மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்ட மாதிரியை எதிர்காலத்திலும் தொடர முடியாது.
காற்று மூலம் மின்சார உற்பத்தி
இலங்கைக்கு நிச்சயமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவைப்படுகிறது, அதில் ஒன்று காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை ஆற்றல். மன்னார் மாகாணத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் அந்த ஆற்றலை உருவாக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அம்பாந்தோட்டை சூரிய சக்தி பற்றிய பேச்சுக்கள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாம் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரம் இருந்தாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது நான் வெளியிட்ட தொலைநோக்கு அறிக்கையில், இலங்கையின் எரிசக்தியை இந்தியாவுக்கு விற்பனை செய்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இப்போது அதற்கான கட்டமைப்பு (GRID) இணைப்பை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளோம். அதானி குழுமத்துடனான முதல் ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |