எளிமையான குடும்பங்களில் உருவான மிகப் பெரும் ஆளுமைகள்: பேராசிரியர் எஸ். ரகுராம் சுட்டிக்காட்டு
எளிமையான குடும்பங்களில் இருந்தே உலகின் மிகப் பெரும் ஆளுமைகள் உருவாகினர் என்றும் மிக அரிதான கிராமப் புறங்களில் இருந்து நகரங்களில் இருந்து தொலைவில் இருக்கக்கூடிய அழகான வசிப்பிடங்களில் இருந்து தான் ஆளுமைகள் உருவாகியுள்ளனர் என்றும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் பதில் துணைவேந்தருமான பேராசிரியர் எஸ். ரகுராம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டையில் அமைந்துள்ள முருகானந்தா கல்லூரியில் இன்று (29) இடம்பெற்ற பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முரசுமோட்டை வளமான மண்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிராமங்களில் இருந்துதான் ஒளிவீச்சாக இளம் குருத்துக்கள் எழுகின்றன. மிகப் பெரும்பான்மையான ஆளுமைகள் அப்படி உருவாகக் காரணம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்நிலப் பகுதி என்பதும் அவர்களை உருவாக்கி வளர்த்தெடுத்த மண் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.
அத்தகைய மண்ணாகவும் அத்தகைய பரப்பாகவும்தான் முரசுமோட்டையையும் அதில் அமைந்திருக்கும் முருகானந்தா கல்லூரியையும் கருதுகிறேன்.
கிளிநொச்சியின் மிகப்பெரிய நீர்கொள்ளளவான இரணைமடுக்குளத்தின் மிகப்பெரும் வடிகால் தளத்தின் மையமாகவும் முரசுமோட்டை இருக்கிறது. குளத்தின் நீர் வடிவால் வடிவாக வருகின்ற போது, எல்லா வளத்தையும் கொண்டு வந்து அந்த நிலத்தில் சேர்க்கும் என்பார்கள்.
சிறந்த கற்றல் சூழல்
இந்த வயல்வெளியும் நீர்ப் பரப்புக்களும் இந்த பிரதேச மக்களின் ஆரோக்கியமான அழகியலான வாழ்வுக்கு கட்டியம் கூறுவதுடன், இங்குள்ள மாணவர்களின் கற்றலுக்கான சூழலையும் விநயமாக ஏற்படுத்தியுள்ளமையும் இப் பிரதேசத்தின் சிறப்பாகும்.
அண்மைய காலங்களில் முருகானந்தா கல்லூரி தன்னுடைய சாதனைப் பட்டியலை நீட்டி வரும் நிலையில் அது விரைவில் கிளிநொச்சியின் முன்னோடிக் கல்லூரியாக தன்னை தக்க வைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குப் பிறக்கின்றது.
சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி் : ஓரணியில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகள்!
மருத்துவபீடத்திற்கு தெரிவு
குறிப்பாக இந்தக் கல்லூரியில் இருந்து மருத்துவப் பீடத்திற்கும் கலைப்பீடத்திற்கும் மாணவர்கள் தெரிவாகி அதிலும் முக்கிய புள்ளிகளை பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகி இருப்பது மிகச் சிறப்பான விடயம். இங்கு கூடியுள்ள மாணவர்கள் அந்த தடத்தில் தொடர்ந்து சாதனைகளை விரிக்க வேண்டும்.
கல்லூரி அதிபர் திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் தலைமையில் இடம்பெற்ற பரிசில் நாள் நிகழ்வை அங்கு ஆசிரியராகப் பணிபுரியும் கவிஞர் தீபச்செல்வன் ஒருங்கிணைத்தார். இதன்போது சாதாரணதரப் பரீட்சையில் முன்னணிப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் உள்ளடங்கலாக சாதனை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கல்வித்துறைசார் அதிகாரிகள், ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |