முட்டை மற்றும் இறைச்சி விலையை கட்டுப்படுத்த புதிய திட்டம்!
சந்தையில் முட்டை, கோழி மற்றும் பன்றி இறைச்சியின் விலைகளில் ஏற்படும் அசாதாரண ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நிலையான விலையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டு, நுகர்வோருக்கு சலுகை விலையை வழங்கும் நோக்கில், குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் அகில இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் பொது போக்குவரத்து விவசாயிகள் அமைப்பு மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கே.கே. சரத் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.
போக்குவரத்து சிக்கல்
ஜா-எலவில் உள்ள தாதுகம பகுதியை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் விலங்கு போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு, நாட்டில் உள்ள கால்நடை பண்ணைகளில் இருந்து பன்றிகள், கோழிகள் மற்றும் முட்டைகளை சந்தைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த செயல்பாட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் உற்பத்தி சவால்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக பன்றிப் பண்ணைகளில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதும், முட்டை, கோழி மற்றும் பன்றி இறைச்சியின் விலைகளில் ஏற்படும் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியமும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் நிகழ்வில் உரையாற்றிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் பணிப்பாளர் நாயகம், பிற அரசு நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உடனடி தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |