ஈழத்தமிழர்களை மீண்டும் தாயகம் அனுப்புங்கள்!வலுக்கும் அழுத்தங்கள்
இந்திய நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை மீண்டும் தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயகபோராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவரான சி.வேந்தனால் இன்றையதினம்(06) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது நியாயங்களையும் அறைகூவல்களையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என தமிழினம் கருதுகிறது.
அரசியல் உரிமை
ஈழத்தமிழர்களதும் இந்தியாவினதும் சமூக அரசியல் பொருளாதார பாதுகாப்பு உறவுநிலைகள் பன்னெடுங்கால வரலாற்றுக்கு உரியவை ஆகையால் அந்த உரித்தின் அடிப்படையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானது.
இந்தியா தனது பிராந்தியத்தின் நலன் மற்றும் ஈழத்தமிழினத்தின் பாதுகாப்பு அரசியல் உரிமை என்பவற்றை கருத்தில் கொண்டே தனது முழுமையான பலத்தின் திரட்சியின் அடிப்படையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் இலங்கையில் தனது படைத் தரையிறக்கத்தையும் நிகழ்தியிருந்தது.
ஈழத்தமிழர்
அதற்கு பின்னரான சில கசப்பான அசாதாரணமான நிகழ்வுகள் இந்திய ஈழத்தமிழர்களது உறவு நிலைகளில் இடைவெளியினை ஏற்படுத்தி இறுதியில் சிறீபெரும்புதூரில் ஏற்படுத்தப்பட்ட துன்பியல் நிகழ்வினை அடுத்து ஈழத்தமிழர்களை இந்தியா முற்றுமுழுதாக கைவிட்டுவிட்டது.
எங்கு எமக்கும் இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம்.
சிறீபெரும்புதூரின் வழக்குகளில் தண்டனைபெற்று இந்திய நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களான முருகன் மற்றும் றொபேட்டயஸ் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவண செய்ய வேண்டும் என இந்திய மத்திய மாநில அரசுகளை எமது மக்களின் சார்பில் கேட்டுகொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |