மின்சார கட்டண திருத்தம்: அமைச்சரவை எடுத்த முடிவு
ஒவ்வொரு 03 மாதங்களுக்கு ஒரு முறையும் மின்சார கட்டணத்தை திருத்தும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது காணப்படுகின்ற பொதுக் கொள்கை வழிகாட்டல்களுக்கமைய மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கான மீளாய்வுக் காலப்பகுதி ஆறு (06) மாதங்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு மீளாய்வுக் காலப்பகுதியை மூன்று மாதங்களாக மாற்றுவதற்கு பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சக்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் மின்சார விநியோகம் தொடர்பான பொதுக் கொள்கை வழிகாட்டிகளைத் தயாரிப்பதற்காக மின்சார விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மீளாய்வுக் காலப்பகுதியை மூன்று மாதங்களாக திருத்தம் செய்வதற்கும், இலங்கை மின்சார சபை மின்சக்தி பணித்தேர்வுக் கணக்காய்வு (Dispatch audit) நடைமுறைப்படுத்துவதற்கும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நீர் மின்னுற்பத்தி பற்றிய முற்கூட்டிய அறிவித்தல்களை பலப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டல்களைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக அதிபர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
