ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் - அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை
வடபகுதியில் அமைந்துள்ள ஆனையிறவு உப்பளமானது தேசிய மக்கள் சக்தி (Npp) அரசாங்கத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட உப்பானது ரஜ உப்பு (Raja Salt) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (R.Chandrasekar), நாடாளுமன்ற உறுப்பினர்களான கணநாதன் இளங்குமரன் (K.Ilankumaran), ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (J.Rajeevan) உள்ளிட்ட ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.
ரஜ உப்பு
எனினும் குறித்த உப்பானது தற்போதும் கூட ரஜ உப்பு என்ற பெயரிலேயே விநியோகம் செய்யப்படுகின்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வலி கிழக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் - அச்சுவேலி ஊடாக நியாயமான விலையில் உப்பு விநியோகம் இடம்பெறுவதாகவும், அது தனது வேண்டுகோள் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அந்த உப்பு பைகளை வலி கிழக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் தமது உத்தியோகபூர்வ மூகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ரஜ உப்பு என்ற பெயரே காணப்படுகிறது.
மக்கள் விசனம்
குறித்த விடயமானது ஆளும் தரப்பினர் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்ப்பையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், அமைச்சர்களும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெடர்ந்து பொய்யுரைத்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த உப்பின் பெயர் ஆனையிறவு உப்பு என இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை என, ஆனையிறவு உப்பளத்தில் நேற்றையதினம் (14) போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






