அதிகரித்த வெப்பநிலை : கண் மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதனால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு
இதேவேளை வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு குறித்த வெப்பநிலையால் அதிக பாதிப்புகள் ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கணினி பாவனை அதிகம் உள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதிக வெப்பநிலை
இந்த நிலையில் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று (09) அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வாறு அதிக வெப்பநிலை பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |