எல்ல பேருந்து விபத்து : வெளியாகவுள்ள விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை
எல்ல பேருந்து விபத்து தொடர்பான விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை - எல்ல பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக் குழு, தற்காலிக அறிக்கையொன்றை அண்மையில் அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தது.
குறித்த அறிக்கையின் தரவுகளுக்கமைய பேருந்தில் இயந்திரக் கோளாறு நிலவியமை கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்து அதிவேகமாக செலுத்தப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.
இறுதி அறிக்கை இவ்வார இறுதியில்
இந்நிலையில், விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பான விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
எல்ல- வெல்லவாய பிரதான வீதியின் 23 ஆவது மற்றும் 24 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இம்மாதம் 4 ஆம் திகதி இரவு 9 மணியளவில் பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் 18 பேர் காயமடைந்தனர். இவ்வாறு விபத்துக்குள்ளான பேருந்தில் சாரதி உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
