வட மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது ஆளுநர் செயலகத்தில் இன்று(14) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இந்த கலந்துரையாடலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலக்கியத் துறை
உள்ளூர் எழுத்தாளர்களின் தற்போதைய நிலைமை, பதிப்பகங்கள், அச்சகங்களின் செயற்பாடுகள், நூல் பதிப்பு மற்றும் விற்பனை, கலை, இலக்கியத் துறையின் சமகாலப்போக்கு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி அமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் தம்மிடம் காணப்படும் நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.
உள்ளூர் எழுத்தாளர்கள்
இதேவேளை, தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பை வடக்கு மாகாணம் முழுவதும் செயற்படும் வகையிலாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகாண கலாசார திணைக்களமானது திறந்தவெளி அரங்குகளில் உள்ளூர் கலைகளை மேடையேற்றி அவற்றினை அழிந்திடாமல் பாதுகாத்து புத்துயிர் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட குழுவினரும் ஆளுநரின் உதவிச் செயலாளர், உள்ளுராட்சித் திணைக்கள பணிப்பாளர், மாகாண கலாசார மற்றும் உதவிப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |