முன்னாள் எரிசக்தி அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த நீதிபதி, விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் பிரதிவாதிக்கு வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டப்பூர்வ அழைப்பாணை
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சாட்சிகளையும் எதிர்வரும் ஜூன் 17 நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சட்டபூர்வ அழைப்பாணை அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் மேலாளராக 2016ஆம் ஆண்டு பணியாற்றிய காலத்தில், கொழும்பு - ஹுனுபிட்டிய களஞ்சியசாலையில் தரை விரிப்புகள் விரிப்பதற்கான கொள்முதல் செயல்முறையில் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 8,859,708 இழப்பு ஏற்பட்டதாகவும், இது ஊழல் குற்றமாகும் எனவும் இலஞ்ச ஆணைக்குழு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |