செய்வதறியாது தத்தளிக்கும் அநுர! முக்கிய அமைச்சருக்கு நேர்ந்துள்ள அவலம்
அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட தொடங்கியுள்ளன.
2015 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து வழக்கு தொடரத் தயாராகி வருகிறது.
அத்தோடு, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நீதிபதியொருவரை குறித்தும் கருத்து தெரிவித்ததற்காக ஜயகொடியை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் அமைப்புகள் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளன.
தற்காலிகமாக பதவி விலகல்
இந்த வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜயகொடி கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜயகொடி, ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக கருதப்படுகிறார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில் அநுர குமார திசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது ஜயகொடியை உரக் கூட்டுத்தாபனத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் இருவரும் வலுவான நட்பை பேணி வந்துள்ளனர். ஜயகொடி, திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால் தற்போது, 2015ஆம் ஆண்டில் உரக் கூட்டுத்தாபன தலைவராக இருந்தபோது ரூ. 8 மில்லியன் நிதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சில நெருங்கிய ஆலோசகர்கள் ஜனாதிபதியிடம் ஜயகொடி தற்காலிகமாக பதவி விலகுவது சிறந்தது என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் காத்திருப்பு
இந்நிலையில், ஜனாதிபதி திசாநாயக்க ஜயகொடியை உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளவில்லை என்றாலும், நீதிமன்ற தீர்ப்பின் முன்னேற்றத்தை காத்திருந்து நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வாரந்தோறும் நடைபெறும் மூத்த அமைச்சர்களுடனான கலந்துரையாடல்களில், ஜயகொடி தன்னிச்சையாக பதவி விலகினால் அரசுக்கு நல்லது என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும், பதவி விலகும் திட்டம் எதுவும் இல்லையென ஜயகொடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இந்த விவகாரம் நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சியினராலும் வலுவாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
