விடுதலைப்புலிகள் அமைப்பு சார்பான நினைவேந்தல்! சபையில் இருந்து ஈ.பி.டி.பி வெளிநடப்பு
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து அமைப்புக்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் நினைவு கூருவதற்கு பொதுவான இடம் ஒதுக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஈ.பி.டி.பி தரப்பு அறிவித்துள்ளது.
ஆனால் அது ஒரு தரப்பினரை மட்டும் நினைவுகூரும் இடமாக அமையுமாக இருந்தால் எமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு இணங்க எமது ஆதரவு இருக்கப்போவதில்லை என்று யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றபோது முதல்வர் மதிவதனியால் நல்லூர் கோயிலின் மேற்கு வீதியில் உள்ள நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் அமைப்பு சார்பான நினைவேந்தல்களை நடத்த பலர் குத்தகைக்கு எடுக்க கோருவதாக கூறப்பட்டது.
யாழ் மாநகரசபை
இதனால் முரண்பாடுகள் ஏற்படுவதால், அதை தவிர்க்க யாழ் மாநகரசபையின் உறுப்பினர்கள் அக்காணியை குத்தகை அடிப்படையில் எடுத்து அந்நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவொன்றை சபையில் பிரஸ்தாபித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த முன்மொழிவு குறித்து சபையில் இவ்வாறு கருத்து தெரிவுத்த அவர் மேலும் கூறுகையில்,
“நினைவு கூரும் இடம் என்பது படுகொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பா காலத்திலிருந்து இறுதி யுத்தம் நடைபெற்ற காலம்வரை இறந்த அனைவரையும் நினைவு கூருவதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு நினைவு கூரலுக்கான பொதுச் சதுக்கமாக அது இருக்குமானால், எமது ஆதரவு இந்த முன்மொழிவுக்கு இருக்கும்.
கட்சியின் கொள்கை
மாறாக தனிப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கான இடத்துக்கு எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடு என்றும் இணங்கிச் செல்லாது.
மேலும், எமது இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால் நாம் அது தொடர்பான விவாதத்தில் தொடர்ந்தும் இருக்கின்றோம்.
இல்லையேல் எமது கட்சி அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்காது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்யும்.” என்று தெரிவித்ததுடன் அங்கு இருந்து ஈ.பி.டி.பியின் 4 உறுபினர்களும் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
