சிறிலங்கா அரச தலைவர் மீது கடும் அதிருப்தியில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்! வெளியான தகவல்
கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டின் தலைவராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினர், தமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதைத் தற்போது புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran wickramaratne) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையிலோ அல்லது சிங்கள இனத்திலோ அல்லது விக்ரமரத்ன குடும்பத்திலோ பிறப்பதற்கான தீர்மானத்தை நான் மேற்கொள்ளவில்லை. மாறாக இவையனைத்தும் இயற்க்கயாக நடைபெற்ற விடயங்களாகும். அதேபோன்றுதான் ஒவ்வொரு மக்களும் தனது பிறப்பு குறித்த தீர்மானத்தை சுயமாக மேற்கொள்வதில்லை.
எனவே ஒவ்வொருவருக்குமென சுயமரியாதையும் சமத்துவமான சூழலில் வாழ்வதற்கான உரிமையும் இருக்கின்றது. எனவே பிறக்கும் ஒவ்வொரு மக்களும் 'இது எனது நாடு' என்று உணரக்கூடியவகையிலான அதுகுறித்துப் பெருமைகொள்ளக்கூடியவாறான நாட்டைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து அதிகளவான இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைதந்தார்கள். இருப்பினும் அண்மைக்காலங்களில் அரச தலைவர், பிரதமர் ஆகியோரின் அமெரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளுக்கான விஜயத்தின்போது அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டமையினை அவதானிக்கமுடிந்தது.
கோட்டாபய ராஜபக்ஷவை அரச தலைவராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினர், தமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதைத் தற்போது புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்றார்.