இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதர் நியமனம்!
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சங் நேற்று (16.01.2026) தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததையடுத்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
அனுபவம்
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக கருதப்படும் எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பது மற்றும் செயல்படுத்துவது ஆகிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில், அமெரிக்க அரசின் தூதரக நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில், எரிக் மேயர் இலங்கைக்கான அமெரிக்க தூதர் நியமனம் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய அரசியல் தொடர்புகளில் புதிய நகர்வுகள் ஏற்படக்கூடும் என அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நேற்றைய தினம் (16.01.2026) வரை இலங்கைக்கான அமெரிக்க தூதராக நான்கு வருடங்கள் ஜூலி சங் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |